வானகரம் மதுக்கடை அருகே கொள்ளையன் வெட்டிக் கொலை..!!

September 13, 2018 12:05 PM

7 0

மதுரவாயலை அடுத்த வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை உள்ளது. இதன் அருகே உள்ள காலி இடத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற புறா மணி (வயது 22) என்பது தெரியவந்தது. மணி மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நகை பறிப்பு, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மதுக்கடை அருகே உடல் மீட்கப்பட்டு உள்ளதால் மதுக்குடிக்கும் போது கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மோதலில் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

கொள்ளையடித்த நகையை பிரிக்கும் போது நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டதா? அல்லது பெண் தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

மணியுடன் கடைசியாக சென்றவர்கள் யார்? யார்? அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? கூடாளிகள் யார்? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...