வலுவான அதிகாரத்தினால் குற்றச்செயல்களை தடுக்க முடியும்

July 13, 2018 8:35 PM

19 0

வலுவான அதிகாரத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மூலம் நாடுகடந்த திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்க முடியும். இதற்கு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாடுகளின் பொருளாதாரங்களை சீரழிக்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பதற்காக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டு வருவதாக உலக வங்கி கணிப்பீடு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு உதவிசெய்யும் இடைத்தரகர்கள் பலர் இருக்கின்றனர். கணக்காளர்கள், சட்டநிபுணர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு வகையில் உதவிசெய்து வருகின்றனர்.

மனித உரிமைகளைப் பேணுவதற்கு நாடுகள் முயற்சிகளை எடுக்கின்றபோதும் இவற்றைத் தடுக்கும் வகையில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றைத் தடுப்பதற்கு வலுவான அதிகாரத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன அவசியமாகும். நாடுகடந்த திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் முயற்சிகளில் சகல மட்டத்தின் ஒத்துழைப்பும் அவசியம்.

அரசாங்கம், வர்த்த நிறுவனங்கள், சிவில் சமூகம், சர்வதேச சமூகம் உள்ளிட்ட சகல தரப்பிலும் ஒத்துழைப்பு அவசியமானது. சர்வதேசத்தில் மாத்திரமன்றி உள்நாட்டிலும் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் வலுப்படுத்தப்படுவது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...