யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி பெண் சட்டத்தரணியை படமெடுத்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்..!!

September 14, 2018 4:27 PM

9 0

புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்ததாக வாக்குமூலம் பெறப்பட்ட இளம் பெண் சட்டத்தரணியை, யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் அத்துமீறி ஒளிப்படம் எடுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் பிரதான நுழைவாயில் பகுதியில் இன்று முற்பகல் 11.35 மணியளவில் இடம்பெற்றது.

இளம் பெண் சட்டத்தரணி செல்வி நவநாதன் என்பவரையே நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஒளிப்படம் எடுப்பதை சடுதியாக அவதானித்த பெண் சட்டத்தரணி, அது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

தான் ஒளிப்படம் எடுக்கவில்லை எனவும் கைபேசியைக் கையில் வைத்திருந்ததாகவும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்புரைத்தார்.

எனினும் மூத்த சட்டத்தரணிகளிடம் சம்பவத்தைக் கூறிய பெண் சட்டத்தரணி, பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து கைபேசியைக் கோரினார். ஆனால் அதனை வழங்க அவர் மறுத்துவிட்டார்.

பின்னர் மூத்த சட்டத்தரணிகள் கேள்வியெழுப்ப தனது கைபேசியை பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கினார். அதில் பெண் சட்டத்தரணியின் ஒளிப்படங்கள் இருந்தன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரனிடம் மூத்த சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் இந்தப் பிரச்சினை இடம்பெற்றுள்ளதால் உரிய நடவடிக்களை எடுக்குமாறு சட்டத்தரணிகளுக்கு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் சட்டத்தரணிகளை சந்தித்துப் பேசினர். இரண்டு தரப்புமே ஒருமித்துப் பணியாற்றும் நிலையில் இந்த விவகாரத்தை இணக்கத்துடன் முடிப்போம் என பொலிஸார் கோரினர்.

அதனை ஏற்க சட்டத்தரணிகள் மறுத்துவிட்டனர். அத்துடன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரை வரும் திங்கட்கிழமை நேரில் சந்திப்பதாக சட்டத்தரணிகள் ஒருமித்த முடிவை எடுத்தனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...