மன்னாரில் மனித எலும்பு அகழ்வு 27ம் திகதி: உரிய திணைக்களங்களுக்கு அழைப்பு

May 17, 2018 12:16 PM

8 0

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து தற்போது உடைக்கப்பட்டுள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த வளாகத்திற்கு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இதன்போது களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா,விசேட சட்ட வைத்திய நிபுணர் , சட்டத்தரணிகள், மன்னார் நகர சபையின் தலைவர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலுக்கு களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுணர் உற்பட அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8 மணிக்கு மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டுதற்போது புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.

அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் முதல் நாள் வருகை தருவதினால் குறிக்கப்பட்ட நேரத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் இடம்பெறும் என சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...