மதுரை-சிவகங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி..!!

October 9, 2017 1:05 PM

5 0

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தென் மாவட்டமான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் டெங்கு தாக்குதல்நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தாலும் சிலர் பரிதாபமாக உயிரிழப்பது வேதனையான நிகழ்வாக உள்ளது.

மதுரை ஆஸ்பத்திரிகளில் கடந்த சில நாட்களாக தினமும் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானார்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலமுருகன் (வயது 46), திருப்பாலையைச் சேர்ந்த கோபால்சாமி (65), பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் (60), மணிநகரம் ஹரிணி (11), ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜா, விருதுநகர் பாண்டிமீனாள் ஆகிய 6 பேர் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர்.

மேலும் பலர் டெங்கு அறிகுறிகளுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் நோயாளிகளின் நெருக்கடியால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் மற்ற வார்டுகளிலும் டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்ககளில் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே உள்ள மாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் நாக லிங்கம் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவரை காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி நாகலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுத்தாலும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடம் டெங்கு பீதி அகலாமல் உள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...