புலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா? நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

May 17, 2018 3:49 PM

15 0

புலம் பெயர் தமிழர்கள் இதற்கு முன் வருவார்களா? நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

கஸ்ட பிரதேசங்களில் இயங்கும் பிரதேசசபைகளினால் மக்களின் குடிநீர் தேவையினை முழுமையாக பூர்த்திசெய்யமுடியாத நிலையில் அதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் பகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கிவருகின்றனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பாலர்சேனை, கொடுவாமடு, இழுப்படிச்சேனை, கித்துள், உறுகாமம், ஈரளக்குளம் பகுதி மக்கள் நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினைகளை எதிர்நோக்கிவருகின்றனர்.

இவர்கள் தமக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கு தினமும் பல கிலோமீற்றர் தூரம் சென்று குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் நிலையே இருந்துவருகின்றது.

இந்த நிலையில் ஏறாவூர்ப்பற்று பிரதேசபையினால் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலும் மக்களின் முழுமையான தேவையினை பூர்த்திசெய்யமுடியாத நிலையே இருந்துவருகின்றது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கனேடிய டைனவியேர் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் உதவியுடன் டரக்டர் மற்றும் நீர்த்தாங்களைப்பெற்று நீர் விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

20 இடங்களில் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு அவற்றிற்கு நீரை வழங்கும் நடவடிக்கைகளை இன்று பாலர்சேனையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்துவைத்தார்.

உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக இந்த உதவிகளைப்பெற்றுக்கொண்டு இந்த குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசம் நேரடியாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். யுத்ததினால் பாதிக்கப்பட்டதாக அனைத்து கிராமங்களும் உள்ளன. இந்த மக்களின் அடிப்படை தேவையாகவுள்ள குடிநீர் என்பது மிகவும் நீண்டகால தேவையாக கோரப்பட்டுவருகின்றது.

உன்னிச்சை குளத்தில் எடுக்கப்படும் நீர் இன்று நகர்ப்பகுதியை நோக்கி செல்கின்றது.இப்பகுதியில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்படாமல் நட்சத்திர விடுதிகளுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் செல்கின்றது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்குமாறு நாங்கள் கோரிவருகின்றோம்.ஆனால் கால இழுத்தடிப்புகள் செய்யப்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகவே செல்கின்றது.

இன்று படுவான்கரையில் உள்ள சில பகுதி மக்கள் குடிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் நீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். பல இடங்களில் பெறப்படும் நீரை இந்த மக்கள் பயன்படுத்தும்போது அது சுத்தமான நீராகவும் இருப்பதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத்தடி நீரில் 80வீதமான நீர் அருந்தமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இவ்வாறான பகுதிகளுக்கு சுத்திகரிக்க்பபட்ட நீரை வழங்குவதே ஆரோக்கியமாக அமையும்.

நாங்கள் படுவான்கரை பகுதியின் பதுளை வீதியில் உள்ள மக்களுக்கு உடனடியாக குடிநீர் வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ச்சியாக விடுத்துவருகின்றோம்.

ஒருசில ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு அது இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாசிக்குடாவில் உள்ளவர்களுக்கு நீர் வழங்குவதற்கு காட்டும் கரிசனையை இந்த மக்கள் தொடர்பில் காட்டுவதில்லை.

அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதலான கவனத்தினை செலுத்தவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் வேறு முடிவுகளை இந்த நீர்தொடர்பில் எடுக்கவேண்டிய நிலையேற்படும்.

அண்மையில் நான் கனடாவுக்கு சென்றபோது அங்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் உட்பட புலம்பெயர் அமைப்புகளை சந்தித்தபோது இந்த குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் தெரிவித்து அதற்கு ஏதாவது உதவிகள் செய்யுமாறு கோரியிருந்தேன்.

அதன்போது அவர்கள் சிலரோடு பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்போது டைனவியேர் நிறுவனத்தினர் இதற்கான உதவியை செய்யமுன்வந்தனர். டைனவியேர் நிறுவன தலைவர் குமார் அழகரெட்னம் முதல்கட்டமாக 20 நீர்த்தாங்கிகளை வைத்து நீரை வழங்குமாறு எங்களிடம்கேட்டிருந்தார்.

அதற்காக டரக்டர் மற்றும் பௌசர் ஒன்றை கொள்வனவுசெய்வதற்கான உதவியினையும் மனிதநேய கரங்கள் ஊடாக வழங்கியிருந்தார். அதனைக்கொண்டு தொடர்ச்சியான நீர்வழங்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

படுவான்கரையின் பதுளை வீதியில் 20 இடங்களை தெரிவுசெய்து அங்கு நீர்த்தாங்கிகளை வைத்து டைனவியேர் நிறுவனத்தின் முழுமையான உதவியுடனும் மனித நேயகரங்களின் பங்களிப்புடனும் வெற்றிகரமான நடைபெற்றுவருகின்றது.இதற்காக உதவிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த 20நீர்த்தாங்கிகளுக்குமான நீரை காசுகொடுத்தே வாங்கவேண்டிய நிலையும் இருக்கின்றது. அத்துடன் இந்த 20 நீர்த்தாங்கிகளும் போதாதநிலையே இருக்கின்றது. இங்குள்ள பல கிராமங்களில் ஒவ்வொரு நீர்த்தாங்கிகளே வைக்கப்பட்டள்ளது. இதுபோதாத நிலையிலேயே இருக்கின்றது. ஒரு கிராமத்திற்கு ஐந்து நீர்த்தாங்கிகள் தேவைப்படுகின்றது.

கஸ்டப்பகுதிகளில் உள்ள பிரதேச சபைகளிடம் நிதிகள் இல்லை. மக்களிடம் வரி அறவிடமுடியாது. வரி அறவிடுமளவுக்கு இப்பகுதி மக்களிடம் வருமானமும் இல்லை. பிரதேசசபையிடம் இங்குள்ள 1085 கிராமங்களுக்கும் நீர் வழங்ககூடிய வசதி வாய்ப்புகள் இல்லை.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் உறவுகள் ஒவ்வொரு கிராமத்திலும் நான்கு ஐந்து நீர்த்தாங்கிகளை வைத்து நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது வறட்சிகாலத்தில் மக்களின் குடிநீர் தேவையினை ஓரளவு பூர்த்திசெய்யமுடியும் என்றார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...