புதிய அரசமைப்பு குறித்து ஜயம்பதி, சுமந்திரனிடம் 20இல் கேட்டறிவார் பப்லோ

October 11, 2017 4:23 PM

8 0

இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்து கொள்வதில் ஐ.நா.அதிகாரிகளும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சுநடத்தவுள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் கேட்டறியவுள்ளார்.

அதேவேளை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் கொழும்பில் தனியாகச் சந்தித்துப் பேச்சுநடத்தவுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் இலங்கை தொடர்பான தனது தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை பப்லோ டிகிறிப் முன்வைக்கவுள்ளார்.

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான இறுதி அறிக்கையை அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பப்லோ டி கிறிப் சமர்ப்பிப்பார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...