பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஆர்வத்துடன் கன்னடம் கற்கும் சசிகலா..!!

January 14, 2018 7:05 AM

9 0

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா கன்னட மொழியை ஆர்வத்துடன் கற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் கன்னட மொழியை கற்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் கன்னடம் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சசிகலா, இளவரசிக்கும் கன்னடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. முதலில் இளவரசி மட்டும் கன்னடம் கற்பதில் ஆர்வம் காட்டினார்.

ஆனால் சசிகலா கன்னடம் கற்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், சிறையில் நடக்கும் கன்னட வகுப்பில் இளவரசியுடன் சேர்ந்து சசிகலாவும் கலந்து கொண்டு வருவதாகவும், கன்னட மொழியை கற்பதில் அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனால் கன்னட எழுத்துகளை நன்றாக எழுதுவதற்கு பழகி கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக தமிழ் புத்தகங்களை சசிகலா ஆர்வத்துடன் படித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ் புத்தகங்கள் தனக்கு வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் சசிகலா கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள ஆண் கைதிகளுக்காக மட்டும் தற்போது நூலகம் இருக்கிறது. சசிகலா உள்ளிட்ட பெண் கைதிகள் புத்தகங்களை படிக்க ஆர்வம் காட்டுவதால், பெண் கைதிகளுக்காக தனியாக நூலகம் அமைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருவதுடன், ரூ.30 ஆயிரத்தை சிறை நிர்வாகம் செலவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், சிறையில் உள்ள நூலகத்திற்காக பெங்களூரு சீனிவாச நகரில் உள்ள மத்திய நூலகத்தில் இருந்து 200 புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சீனிவாச நகர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் யாரும் தற்போது புத்தகங்களை படிக்க ஆர்வம் காட்டாத காரணத்தால் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு புத்தகங்களை அனுப்பி வைத்திருப்பதாக நூலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...