தாமரைப் பூ பறிக்கச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்! ஐவர் சடலமாக மீட்பு

March 11, 2018 6:43 PM

11 0

திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளத்திற்கு இன்றைய தினம் தாமரைப் பூ பறிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர்.

தாமரைப் பூ பறிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்ததால் குறித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த, குளத்திற்கு வழிபாட்டிற்காகவும், பொழுதுபோக்குக்காகவும் சென்ற ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நிலாவெளி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுரேஸ் கேசிக்ராஜ் (வயது 9) சுரேஸ் யுதேஸன் (வயது 7), சுகந்தன் பிரணவி (வயது 7), தங்கத்துரை சங்கவி (வயது 9) மற்றும் படகை ஓட்டிச் சென்ற தருமலிங்கம் தங்கத்துரை (வயது 32) ஆகியோரே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

சேறும் சகதியுமான அந்தக் குளத்திலுள்ள தாமரைப் பூக்களை இவர்கள் பறித்துக் கொண்டிருந்த வேளையில், தோணி கவிழ்ந்துள்ளது.

தொடர்ந்து, விடயம் அறிந்த அருகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்த போதிலும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சடலங்கள் மீட்கப்பட்டவுடன் அவை பிரேத பரிசோதனைக்காக நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...