தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல்..!!

November 9, 2018 2:27 PM

11 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

” வரும் 14ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளமாட்டோம். தேவைப்பட்டால் எங்கள் பலத்தை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். போதிய ஆதரவு உள்ளது என்று தெரிந்த பின்னரே நாங்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்தோம்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் சிறிசேன தெளிவாக தெரிவித்துள்ளார். யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு, அவருக்கு வழங்கியுள்ளது. எங்கள் கட்சி தேசத்தின் நலனுக்கே முன்னுரிமை வழங்கியது.

ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்தின் பக்கம் சாய்ந்து கொண்டு சிறிலங்காவின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் நலனை விட மேற்குலகின் நலன் குறித்தே அதிகம் கவனம் செலுத்தினார். அவர், இன்னமும் மேற்குலகிலேயே தங்கியிருக்கிறார். சிறிலங்கா மக்களில் அவர் தங்கியிருக்கவில்லை.

முன்னாள் பிரதமர் தான் பதவி நீக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்றால், ஏன் அவர் நீதிமன்றம் செல்லவில்லை? ஏன் அவர் மக்களிடம் செல்லவில்லை?

தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை. தமிழ்க் கட்சிகள் தங்கள் நலனை மையமாக வைத்தே செயற்படுகின்றன அவர்கள் மக்களின் நலன் குறித்த அக்கறையுடன் செயற்படவில்லை.

பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் தங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...