தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் கடல் மாசடைகின்றது: கடற்தொழில் சமாச தலைவர்..!!

July 13, 2018 5:10 PM

12 0

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் படகுகளைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதனால் கடல் மாசுபடுவதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் ஊர்காவற்துறை கடற்பரப்பு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளன.

அதனால் அந்த படகுகள் பழுதடைந்து படகில் உள்ள இரும்புகள் துருப்பிடித்து அவை கடலில் கலக்கின்றன. அத்துடன் படகின் இயந்திர பகுதிகளில் இருந்து வெளியேறும், டீசல் மற்றும் ஓயில் என்பன கடலில் கலக்கின்றன இதனால் கடல் மாசுபடுகின்றன.

அதனால் அந்த படகுகளை மீள கையளிப்பதற்கு நாங்கள் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்குகின்றோம். கடந்த காலங்களில் படகுகளை விடுவித்தால் அவர்கள் மீள எல்லை மீறுவார்கள் என படகுகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தோம்.

தற்போது இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள வெளிநாட்டு படகுகளை ஒழுங்கு படுத்தல் சட்டத்தின் கீழ் எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுவதனால், எதிர்காலத்தில் எல்லை மீறும் மீனவர்களை கட்டுப்படுத்த முடியும்.

அதனால் அவர்கள் வந்த படகினை மீளக் கையளிப்பத்தில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...