ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல் பதவி விலகுகிறார்: பிரதமர் அறிவிப்பு..!!

December 1, 2017 12:00 PM

4 0

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ (வயது 83) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

பதவி விலகுவதற்கான விதிகளும் சட்டத்தில் இல்லை என்பதால், மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா கடந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மன்னர் பதவி விலகுவதற்கான நடைமுறைகள் தொடங்கியது.

இந்நிலையில், மன்னர் அகிஹிட்டோ 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவி விலக உள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே இன்று அறிவித்தார். அகிஹிட்டோ பதவி விலகும் தேதியை முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இம்பீரியல் கவுன்சில் சிறப்பு கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மன்னர் பதவி விலகல் மற்றும் புதிய மன்னர் முடிசூட்டும் விழா ஆகிய நிகழ்வுகளை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்யும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மன்னர் அகிஹிட்டோ பதவி விலகிய மறுநாள் அவரது மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ (வயது 57) மன்னராக முடிசூட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மன்னர் அகிஹிட்டோ அமர்ந்த ‘கிறிசாந்தமம்’ அரியணையும் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்படும்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...