சிறுவர் தினத்தை முன்னிட்டு பத்தனையில் விழிப்புணர்வு ஊர்வலம்..!! (படங்கள்)

October 11, 2017 2:30 PM

8 0

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

‘உலகின் உன்னத படைப்பாளிகளான சாதிக்க பிறந்த சிறுவர்களை சோதிக்காதே’ என்ற வாசகங்களுடன் ‘தாய், தந்தை, முதியோரின் அன்பு பாசப்பிணைப்பினூடாக சிறுவர்களை அவர்களது அதிசய உலகத்திற்கு அழைத்து செல்வோம்’ எனும் தொனிப்பொருளில் இது நடைபெற்றது.

பத்தனை சந்தியிலிருந்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி வளாகம் வரை சென்ற இந்த ஊர்வலத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலை மாணவர்கள் 120 பேர் உள்ளடங்கிய ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாகிகள், பீடாதிபதி, உப பீடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியின் மாணவர்கள், பத்தனை பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், சிறுவர் உரிமை தொடர்பில் கோஷங்கள் எழுப்பிய வண்ணம், சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர் எங்களை சார்ந்தவர்கள் அல்லர், உலகின் உன்னத படைப்பு சிறுவர்கள், சிறார்களை ஒருபோதும் சீரழிக்க வேண்டாம், சாதிக்க பிறந்த சிறுவர்களை சோதிக்காதே போன்ற பதாதைகளையும் ஏந்திய வண்ணம் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.

இதனையடுத்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சிறுவர் உரிமை தொடர்பில் கை அச்சு இடும் நிகழ்வுடன், வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும், பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு, கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...