சாதாரண காய்ச்சலுக்கு டெங்கு இருப்பதாக அறிக்கை: திருச்சி தனியார் ரத்த பரிசோதனை மையத்துக்கு நோட்டீஸ்..!!

October 9, 2017 9:05 PM

5 0

திருச்சி உறையூரில் செயல்பட்டு வரும் தனியார் ரத்த பரிசோதனை மையம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் பெரும்பாலானவை டெங்கு இருப்பதாக வழங்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரா தலைமையிலான மருத்துவக்குழுவினர் அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, காய்ச்சல் பாதிப்பால் வந்த நோயாளிகளுக்கு பரிசோதனை முடித்து வழங்கப்பட்ட அறிக்கையில் பெரும்பாலானவை டெங்கு அறிகுறி இருப்பதாக வழங்கப்பட்டுள்ளதும், டெங்கு பரிசோதனை மேற்கொள்ள ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து நகர்நல அலுவலர் டாக்டர் சித்ரா கூறும் போது, பொதுவாக ரத்த பரிசோதனை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் ஆய்வுக்குழாயை 6 முறை எந்திரம் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் அந்த மையத்தில் கைகளாலேயே ஆய்வுக்குழாயை சுத்தம் செய்கிறார்கள்.

டெங்கு கிருமி சோதனை குழாயில் இருக்குமானால் அடுத்த ரத்த பரிசோதனையிலும் எதிரொலிக்கக்கூடும். புள்ளி விவரங்களை கம்ப்யூட்டர் முறையில் பதிவு செய்யாமல் கைகளாலேயே எழுதுகிறார்கள். இவ்வாறு எழுதப்பட்டுள்ள பதிவேடுகளில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

டெங்கு பாதிப்பு உள்ளதாக கூறப்படும் நபருக்கு ரத்த தட்டணு எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது. ரத்த தட்டணு குறையும்போது டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவரும். ஆனால், டெங்கு பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இங்கு நடத்தப்பட்ட ஆய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் டெங்கு பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டதில் ஏற்பட்ட விதிமீறல் குறித்து விளக்கம் கேட்டு மையத்துக்கு நோட்டீசு அனுப்பப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...