சட்டவிரோதமாக சொத்து சேர்த்த விமல் வீரவங்ச

May 16, 2018 2:14 PM

12 0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 71 கோடி ரூபாவுக்கும் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் விமல் வீரவங்ச 71 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான சொத்துக்களையும் பணத்தையும் சட்டவிரோதமாக சம்பாதித்தன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக கூறி, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

வழக்கு சம்பந்தமாக கணனி சாட்சியங்கள் பரிசோதனை செய்யும் அறிவிப்பாணை குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்பிடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த தரப்பினர் இதற்கு பதில் எதனையும் வழங்கவில்லை என ஆணைக்குழுவின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கணனி சாட்சியங்களை பெறுவது தொடர்பில் ஆலோசனைகளை பெற வேண்டும் என்பதால், அதற்காக காலஅவகாசத்தை வழங்குமாறு வீரவங்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வழக்கை ஆகஸ்ட் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...