காப்பகத்திலிருந்து பலவந்தமாக சிறுவர்களை அழைத்து சென்ற சிறுவர் நன்னடத்தை அதிகார சபையினர்!

September 17, 2017 12:32 PM

3 0

திருகோணமலை - இலுப்பைக்குளம், சாம்பல் தீவு பகுதியில் அமைந்துள்ள கிருபை கல்வி கரிசனை நிலையம் என்ற சிறுவர் காப்பகத்திலிருந்து எட்டு சிறுவர்களை, சிறுவர் நன்னடத்தை அதிகார சபையினர் பலவந்தமாக அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த சிறுவர் காப்பகமானது பல வருடங்களாக இயங்கிவருகின்றது. இக்காப்பகத்தில் ஆண், பெண் பிள்ளைகள் என 22பேர் வரையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் அவர்களுக்குரிய கல்வி வளங்களும் சிறப்பாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி திடீரென திருகோணமலை சிறுவர் நன்னடத்தை அதிகார சபையினர் அந்த காப்பகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது காப்பகத்திலிருந்த 5 தொடக்கம் 16 வயது வரையிலான எட்டு சிறுவர்களை பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இவ்வாறு வெளியேற்றியுள்ள சிறுவர்களில், இரண்டு மாத கைக்குழந்தையாக அக்காப்பகத்திலிருந்து வளர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், காப்பகத்தின் நிர்வாகிகள் ஏன் இங்கிருந்து குறித்த சிறுர்களை அழைத்து செல்கின்றீர்கள் என வினவிய போது, குறித்த காப்பகம் கிறிஸ்தவ காப்பகம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, வெளியேற்றப்பட்டுள்ள சிறுவர்கள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினாலேயே இக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கையானது ஓர் தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக அரச அதிகாரிகளின் அதிகாரங்களை துஷ்பிரயோகப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது காப்பக நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதற்குறிய சகல ஆவணங்களும் தம்மிடம் உள்ளது என்றும், இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் கடமையாற்றும் ஒருவரே முற்றிலும் காரணம் என சந்தேகிப்பதாகவும் காப்பக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...