ஐஎஸ் பயங்கரவாதி அடைக்கப்பட்டுள்ள கடலூர் சிறையில் அதிரடி சோதனை..!!

November 10, 2018 9:00 PM

27 0

சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு உயர்ரக வசதிகள் செய்து கொடுத்ததால் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருந்து வந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்து வந்தனர்.

இதற்கிடையே புழல் சிறையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரான் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறை தகர்க்கப்பட்டு ஐஎஸ் தீவிரவாதி அன்சார் மீரானை மீட்டு கொண்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தியதில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியிலிருந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த முறை சிறைத்துறை வளாகத்தில் சோதனை செய்யும்போது மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் புதிதாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரானை சிறையை தகர்த்து மீட்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சிறை வளாகத்தில் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...