இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை சபரிமலைக்கு அனுப்ப வேண்டாம்- இந்து அமைப்புகள் கோரிக்கை..!!

November 4, 2018 6:05 PM

10 0

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்ததை தொடர்ந்து கடந்த மாதம் ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.

அவர்களில் பலர் நடுவழியில் பம்பா, நிலக்கல் மற்றும் சில பகுதிகளில் இந்து அமைப்பினரால் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். இதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஊடகவியலாளர்கள் குவிந்தனர்.

சில செய்தி சேனல்கள் மற்றும் ஊடகங்களின் சார்பில் பெண் நிருபர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஒருதரப்பினர் தாக்கி வாகனங்களுக்குள் சிறைபிடித்து வைத்ததாக செய்திகள் வெளியாகின.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு விசேஷ பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை ஒருநாள் மட்டும் தரிசனத்துக்காக திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், சபரிமலை பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு இளம்வயது பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என ஊடகங்க நிறுவனங்களுக்கு இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

விஸ்வ இந்து பரிஷத், இந்து ஐக்கியவேதி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கூட்டமைப்பான சபரிமலை கர்மா சமிதி சார்பில் அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இளம்வயதுடைய பெண் நிருபர்கள் தொழில் நிமித்தமாக இங்கு செய்தி சேகரிக்க வருவதாலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சபரிமலை நுழைவு விவகாரத்தில் பக்தர்களின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் அது உங்களின் (ஊடகங்கள்) உரிமையாகும். ஆனால், பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும் ஒரு நிலைப்பாட்டினை நீங்கள் எடுக்க மாட்டீர்கள் என நாங்கள் நம்புகிறோம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...