ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரன், மதுசூதனன் சொத்து மதிப்பு என்ன?..!! (வீடியோ)

December 1, 2017 8:35 PM

6 0

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர்கள் மூவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களுடன் சொத்து மதிப்பு பட்டியலையும் அவர்கள் இணைத்துள்ளனர்.

தினகரனின் அசையும் சொத்துகள் ரூ16.73 லட்சம், அசையா சொத்துகள் ரூ.57.44 லட்சம், மொத்த சொத்து மதிப்பு ரூ.74.17 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்து, ஒத்திவைக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கடந்த மார்ச் 25-ம் தேதி வேட்பு மனுவுடன் சொத்து மதிப்பு பட்டியலை இணைத்திருந்த தினகரன், தனது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.69 லட்சம் என்றும் மனைவி மற்றும் வாரிசுகளுடன் இணைந்த சொத்து மதிப்பு ரூ.10.77 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் இன்று அளித்துள்ள சொத்து மதிப்பு பட்டியலில் அசையும் சொத்துகள் ரூ.12.53 லட்சம், அசையா சொத்துகள் ரூ.1.37 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.1.49 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மனைவி மற்றும் வாரிசுகளுடன் இணைந்த சொத்து மதிப்பு ரூ.5.37 கோடி என்று இவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் இணைத்துள்ள சொத்து பட்டியலில் அசையும் சொத்துகள் ரூ.2.57 லட்சம், அசையா சொத்துகள் ரூ.10 லட்சம். மொத்த சொத்து மதிப்பு 12.57 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...