அமைச்சின் செயலாளருக்கும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவிக்கும் இடையில் முரண்பாடு…!!

February 9, 2018 11:01 AM

4 0

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரினால் அண்மையில் கூட்டப்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை கூட்டம் சட்ட ரீதியானதல்ல என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மரினி டி லிவேர்ரா கூறினார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் பணிப்பாளர் சபை கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் இருப்பது அதன் தலைவருக்கே என்பதுடன், அதற்கு தலைமை தாங்க வேண்டியது தலைவரே என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறிருக்கின்ற போதிலும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரால் கடந்த 07ம் திகதி பணிப்பாளர் சபை கூட்டம் கூட்டப்பட்டிருந்ததுடன், அந்தக் கூட்டம் சட்ட ரீதியானதல்ல என்பதால் தான் அதில் கலந்து கொள்ளவில்லை அவர் கூறினார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பணிப்பாளர் சபை கூட்டத்தை கூட்டுவதற்கு தான் எடுத்த முயற்சிகளை, அமைச்சின் செயலாளர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து தடுத்திருந்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி மரினி டி லிவேர்ரா கூறினார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரத்னவிடம் அத தெரண வினவிய போது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சுமத்தும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக கூறினார்.

இதுவரை மூன்று தடவைகள் பணிப்பாளர் சபை கூட்டம் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தக் கூட்டங்களுக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சமூகமளிக்கவில்லை என்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரத்ன கூறினார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...