அதிவேகப் பாதைக்கான கடனில் மோசடி! அர்ஜுன் அலோசியஸ் மீது குற்றச்சாட்டு

February 5, 2018 11:46 AM

6 0

பிணைமுறி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் அதிவேகப் பாதைக்கான கடன் தொகையில் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், கண்டி அதிவேகப் பாதையின் நிர்மாணத்துக்கான கடன் ஜப்பானிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் இதற்கான மத்தியஸ்தம் வகித்திருந்தார்கள்.

குறித்த கடன் தொகையைப் பெற்றுக் கொடுத்த பின்னர் அதற்கான காப்புறுதி நடவடிக்கையின் போது அவர்கள் பெரும் தொகையொன்றை மோசடி செய்துள்ளனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடி போலவே இதுவும் பாரிய மோசடியொன்றாகும்.

பொதுவாக கடன் தொகையொன்றைப் பெறும் நாடு அதனைச் செலுத்த முடியாத கட்டம் ஏற்பட்டால் அதற்கான மாற்று வழியாக காப்புறுதியொன்றை பெற்றுக் கொள்வது சர்வதேச சம்பிரதாயம்.

அந்த வகையில் தற்போது கடன்தொகையின் 2.5 வீதமே காப்புறுதி தொகையாக அறவிடப்படுகின்றது.

எனினும் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் பத்துவீத தொகையை பெற்றுக் கொண்டே காப்புறுதிக்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்துள்ளனர். அதன் மூலம் சுமார் 14 பில்லியன் ரூபா பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர் என்றும் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...