Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக விடுதலைப் புலிகளின் எழுச்சி பாடல்கள்!

January 14, 2018 7:04 PM
12 0

தேர்தல் பிரச்சாரங்களின் போது விடுதலைப் புலிகளின் எழுச்சி பாடல்களை பயன்படுத்துவது, தேர்தல் சட்ட மீறல் மட்டுமல்ல, அது நாட்டின் சட்டத்தையே மீறும் செயல் என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் விடுதலைப் புலிகளின் எழுச்சி பாடல்களை பயன்படுத்துவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வடமாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்த கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் விடுதலைப் புலிகளின் எழுச்சி பாடல்களை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்துவதாக அறியமுடிகின்றது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் எழுச்சி பாடல்கள் பயன்படுத்துவது தேர்தல் சட்ட மீறல் மட்டுமல்ல. அது நாட்டின் சட்டத்தையே மீறும் செயலாகும்.

தேர்தல் பிரச்சாரங்களின் ஈடுபடும் போது தேர்தல் சட்டங்களை மதிக்கவேண்டும். இது குறித்து அனைத்து கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் எழுச்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தது.

இது தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0