Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

சீ.விக்கு டெலோ விடுத்த கோரிக்கை! டெனீஸ்வரனின் அமைச்சு பதவியும் பறிப்பு?

July 16, 2017 2:25 PM
1 0
சீ.விக்கு டெலோ விடுத்த கோரிக்கை! டெனீஸ்வரனின் அமைச்சு பதவியும் பறிப்பு?

வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீதான நடவடிக்கையின் போது டெலோ அமைப்பின் பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டெலோ அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு வடமாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு, டெலோ அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் கடந்த வௌ்ளிக்கிழமை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில், "எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்துள்ளார்.

பா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதற்கும் கட்சி தீர்மானித்துள்ளது.

டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் அறியத்தருவோம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், "டெலோ அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதம் கிடைக்கபெற்றது.

அந்த கடிதத்தின் உள்ளடக்கங்கள் கவனத்தில் எடுக்கப்படும். ஏற்கனவே அமைச்சர் பா.டெனீஸ்வரன் எமது விசாரணைக்குழு முன் தான் தெரிபமாட்டார் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருந்தேன்.

எனவே உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0