Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

எல்லை விவகாரம்: இந்தியாவுடன் அமைதி காக்க விரும்புவதாக சீனா தெரிவிப்பு

October 10, 2017 5:37 AM
1 0

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் அமைதியை மேம்படுத்த விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின், இந்தியா- சீனா எல்லைப்பகுதியான ‘நாதுலா’ பகுதிக்கான விஜயத்தை அடுத்தே சீனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவா சுனியிங், செய்தியாளர்களை சந்தித்து பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“சீனா-இந்தியா எல்லையில் உள்ள சிக்கிம் பகுதி, சீனா-இங்கிலாந்து இடையே 1890 ஆம் ஆண்டு போடப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மூலம் பிரிக்கப்பட்டது. இந்த உண்மைக்கு மிகச்சிறந்த சாட்சியாக ‘நாதுலா’ பகுதி விளங்குகிறது.

இரு நாடுகள் இடையே ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருக்கும் எல்லை தொடர்பான ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் அடிப்படையில், எல்லை பகுதியில் இந்தியாவுடன் இணைந்து அமைதியை பராமரிக்க சீனா விரும்புகின்றது” என தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து,அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன், எல்லையோர படையினருடன் ஆலோசனைகளையும் நடத்தியுள்ளார்.

இவ்வாறாக ‘நாதுலா’ பகுதியின் அசல் எல்லைக்கு சென்ற போது, அங்கு சீன வீரர்களடன் கை குலுக்கி நமஸ்தே கூறியுள்ளார். இந்த விடயம் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளதை அடுத்து, சீனா மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இந் நிலையில் டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே அடிக்கடி மோதலும், பதற்றமும் ஏற்பட்டு வரும் நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு அப் பகுதியின் அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0