Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

எல்லைத்தகராறில் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை 8 மணி நேரம் அகற்றாத போலீசார்..!!

August 11, 2018 8:05 PM
3 0

கோவை சூலூர் அருகே உள்ள அத்தப்பக் கவுண்டன்புதூர் குளத்தூர் ரோடு பகுதியில் ஒரு மயானம் உள்ளது. இங்குள்ள ஒரு மரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

வாலிபர் பிணமாக தொங்கும் இடம் தங்கள் எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று சூலூர், சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு போலீசாருக்கு இடையே பெரும் எல்லை தகராறு ஏற்பட்டது.

யார் வாலிபர் உடலை மீட்பது என்பதில் பெரும் சிக்கல் நிலவியது. இதனால் 8 மணி நேரம் தூக்கில் தொங்கிய நிலையிலேயே வாலிபர் உடல் இருந்தது. இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து இருகூர் கிராம நிர்வாக அலுவலர் நவீன்குமாருக்கு தெரிய வந்ததும் அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு சாலைகள் சூலூர், பீளமேடு, சிங்காநல்லூர் பகுதிகளையொட்டி செல்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. ஆனால் போலீசாரின் எல்லை தகராறு காரணமாக விபத்தில் சிக்குபவர்கள் நீண்ட நேரம் படுகாயத்துடன் சிகிச்சைக்காக போராட வேண்டிய பரிதாப நிலை உள்ளது.

பல நேரங்களில் நேரம் விரயத்தாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எல்லைப்பகுதியை போலீஸ் நிலையங்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0