Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இறுதி யுத்தத்தில் அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய யாழ். வணிகர் கழகம்

September 16, 2017 10:42 AM
2 0
இறுதி யுத்தத்தில் அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய யாழ். வணிகர் கழகம்

யாழ். வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தின் போது அங்கவீனமான வட மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் ஐவருக்கு வாழ்வாதார மற்றும் சுய தொழில் ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு இன்று முற்பகல் மானிப்பாய் வீதியிலுள்ள யாழ். வணிகர் கழகப் பணிமனையில் வணிகர் கழகத் தலைவர் இ.ஜனக்குமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இறுதி யுத்தத்தின் போது அங்கவீனமான முன்னாள் போராளிகள் மூவருக்குப் பெறுமதியான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். வணிகர் கழகத்தின் முன்னாள் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான இ.ஜெயசேகரன் மாகாணசபை உறுப்பினர் பதவிக்காலத்தில் தனக்கு வழங்கப்படுகின்ற சம்பளப் பணத்தைப் போரால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட வட மாகாண மக்களுக்கு வாழ்வாதார உதவியாக மாதாந்தம் வழங்க முன்வந்துள்ளார்.

இந்த உதவிகள் யாழ். வணிகர் கழகம் ஊடாக மாதாந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இறுதி யுத்தத்தின் போது அங்கவீனமான முன்னாள் பெண் போராளியொருவரின் வாழ்வாதாரத்திற்காக 25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு முன்னாள் போராளியின் சுயதொழில் முயற்சிக்கு 30,000 ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ். வணிகர் கழகத்தின் தலைவருடன் வடமாகாண சபை உறுப்பினரும், வணிகர் கழகத்தின் முன்னாள் தலைவருமான இ.ஜெயசேகரன், வணிகர் கழகப் பொருளாளர் மற்றும் வணிகர் கழக உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் புனிதமான இந்தக் காலப் பகுதியில் யாழ். வணிகர் கழகம் முன்னாள் போராளிகள் ஐவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளமையை யாழ். சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

தமிழினத்தின் விடுதலையைத் தம் மூச்சாகக் கொண்டு யுத்த களத்தில் பல்வேறு இன்னல்களைச் சுமந்து போராடிய முன்னாள் போராளிகளுக்கு உதவ ஏனைய பொது அமைப்புக்கள், அரசியல் வாதிகள், புலம்பெயர், உள்நாட்டு நன்கொடையாளர்கள் முன்வர வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0