Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரவில்லை: யாழில் கண்ணீர் சிந்திய தாய்மார்கள்

March 14, 2018 12:59 PM
12 0

ஒரு வருடமாக வீதியில் கிடந்து போராடியும், அரசாங்கம் ஆறுதல் சொல்வதற்கும் கூட எங்களை பார்க்கவில்லை என மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தை நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்மல்க கூறியுள்ளனர்.

“இன்றுடன் 364 நாட்கள் தொடர்ச்சியாக போராடிவருகிறோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது எங்களுக்கு சொல்லப்படவேண்டும்.

அதற்காகவே ஒரு வருடமாக வீதியில் கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். மழையிலும், வெயிலிலும் இருக்கும் எங்களை ஆறுதல்படுத்த கூட இந்த அரசாங்கத்தினால் இயலவில்லை.

அதனால் எங்களுக்கு கவலையும் இல்லை. இன்னும் எத்தனை வருடங்களானாலும் பரவாயில்லை. எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்பது தெரியும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.

நாளை எங்களுடைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்த நாளிலாவது எங்களுடைய குரல் ஐ.நாவுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் கேட்கவேண்டும்.

அதற்காக நாளை காலை போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என கண்ணீர்மல்க கூறினார்.

2017ம் பங்குனி 15ம் திகதி எங்களுடைய உறவுகளை தேடி மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தை ஆரம்பித்தோம். இன்றளவும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

ஏன் இருக்கிறீர்கள்? என கேட்பதற்கும் கூட ஆள் இல்லாத நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த ஒரு வருடத்தில் வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்திருக்கிறோம்.

அத்தனையும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவினர்களை மீட்பதற்கே. என்னுடைய மகன் 17 வயதில் காணாமல்போனார். இப்போது அவருக்கு 24 வயதாக இருக்கும்.

என்னுடைய பிள்ளை உயிருடன் இருக்கிறான். என்னுடைய பிள்ளை எங்கேஇருக்கின்றான்? என்ன செய்கிறான்? என்பது எனக்கு கூறப்படவேண்டும்” என கூறி கண்ணீர் சிந்தினார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0