Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஆர்வத்துடன் கலந்துக் கொண்ட இளைஞர்கள்

May 28, 2017 4:59 PM
34 0
ஆர்வத்துடன் கலந்துக் கொண்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணம் - அளவெட்டி வடக்கு தவளக்கிரி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அனுசரணையில் மாபெரும் குருதிக் கொடை முகாம் அளவெட்டி வடக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் கழகத்தின் உபதலைவர் ந. சதீஸ்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் குருதிக் கொடை முகாம் இன்று (28) காலை 09 மணியிலிருந்து பிற்பகல்-03.30 மணி வரை நடைபெற்றது.

இதன்போது, 52 இளைஞர்களும், இரண்டு யுவதிகளும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு இரத்தம் வழங்கியதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அளவெட்டி இளைஞர்களை ஒன்றிணைத்துச் சமூகத்திற்கு ஆக்கபூர்வமான சேவைகள் வழங்கும் நோக்கில் கடந்த ஜனவரி மாதம்-01 ஆம் திகதி உதயமான அளவெட்டி வடக்கு தவளக்கிரி இளைஞர் கழகம் ஆரம்பிக்கப்பட்டுச் சில மாதங்களில் நடாத்திய முதலாவது குருதிக் கொடை முகாம் இதுவாகும்.

முதலாவது குருதிக் கொடை நிகழ்விலேயே 54 இளைஞர், யுவதிகள் தாமாக முன்வந்து குருதிக் கொடை வழங்கியமையைத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி பெரிதும் வரவேற்றுள்ளார்.

நாங்கள் எமது வைத்தியசாலையூடாக நடாத்தி வரும் நடமாடும் இரத்ததான முகாம்களில் முதலாவது தடவையிலேயே 54 பேர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அந்த வகையில் முதல் தடவையிலேயே இளைஞர்கள் மிகுந்த ஊக்கத்துடன் இரத்ததானம் வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அத்துடன் குறித்த இளைஞர்கள் தற்போது குடாநாட்டில் நிலவும் இரத்ததானத் தேவையைக் கருத்திற் கொண்டு நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடத்தவுள்ளதாகத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அளவெட்டி இளைஞர்களின் இத்தகைய செயற்பாடு ஏனைய அனைவரிற்கும் முன்னுதாரணமான செயற்பாடாக அமைந்துள்ளது.

ஆகவே. ஏனைய கிராம மட்டப் பொது அமைப்புக்களும் இதனை முன்மாதிரியாகக் கொண்டு தாங்களாக இரத்ததானம் வழங்க முன்வருவதன் ஊடாக இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யலாம் என்றும் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் கூறியுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0