
நாட்டில் சுற்றாடல் சவால்கள் அதிகமாக காணப்படும் மாவட்டமாக தற்போது கம்பஹா மாவட்டம் காணப்படுவதுடன், இந்த சவால்களை வெற்றி கொள்ள பாடசாலை மாணவர்கள் முதல் சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய நூற்றாண்டு விழாவில் இன்று(சனிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்கள் சுற்றாடலை பாதுகாப்பதற்கு முன்னோடிகளாக செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஜனாதிபதி இதன்போது மாணவர்களிடம் முன்வைத்துள்ளார்.
அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளும் தமது பிறந்த நாளன்று மரக்கன்றொன்றினை நாட்டுவதற்கு அவர்களை பயிற்றுவிக்கும் வகையிலான செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி, பாடசாலை அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றாடலே எதிர்கால உலகின் நிலவுகையை தீர்மானிக்கும் காரணியாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை சகலரும் துரிதமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆதாரம்: athirady.com